==================
தூத்துக்குடி,
மார்ச், 31
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை சுற்றிலும் தொழிற்சாலைகள், தொழில்நிறுவனங்கள் நிரம்பி காணப்படுவதால் நாளுக்கு நாள் வெளியூர்களில் இருந்து மக்கள் புலம்பெயந்து தூத்துக்குடியில் குடிபெயர்ந்து வருகின்றனர். இதனால், தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியடைந்து வருகிறது. இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்வசதி, பாதாள சாக்கடை திட்டம் வடிகால் வசதி என புதிய கட்டமைப்புகளை உருவாக்கிட தூத்துக்குடி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து அதற்கென பல நூறு கோடி ரூபாயை நிதியாக மத்திய அரசு ஒதுக்கியது.
தூத்துக்குடி நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், மாநகராட்சி பகுதியோடு மீளவிட்டான், சங்கரபேரி கிராமத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைத்தனர். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் முழுமையான அடிப்படை வசதிகள் கட்டமைக்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த மழை காலத்தில் பெய்த கனமழையினால் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை மாநகராட்சி நிர்வாகம் ஒருசில பகுதிகளில் அகற்றினாலும், பல பகுதிகள் மழைநீர் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 16 வது வார்டு பகுதியான கதிர்வேல் நகர் 2வது தெரு மற்றும் கதிர்வேல்நகர் பாரதி தெருக்களில் இன்னும் மழைநீர் கழிவு நீர் குளம் போல் காட்சியளிக்கிறது . அதனை அகற்றப்படாமல் இருப்பதால் மேற்கண்ட இடங்களில் உள்ள கழிவு நீர்களில் பாசியடைந்து தெப்பம் போல் காட்சியளிக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கர்ப்பிணி பெண்கள், மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கதிர்வேல் நகர் 2வது தெரு மற்றும் கதிர்வேல்நகர் பாரதி தெரு பகுதி சாலைகளில் தேங்கியிருக்கும் மழைநீரில் மீன்கள் துள்ளி குதித்து, அம்மீன்களை பொதுமக்கள் பிடிக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து பார்க்கும்பொழுது மேற்கண்ட பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கழிவுநீரை அகற்ற முன்வரவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிhவாகம் செவிசாய்க்கவில்லை என அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க அமைப்பின் நிறுவனத்தலைவர் எஸ்.பி.மாரியப்பன் கதிர்வேல் நகர் 2வது தெரு மற்றும் கதிர்வேல்நகர் பாரதி தெரு பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடப்பதை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அப்பகுதி பொதுமக்கள் எஸ்.பி.மாரியப்பனிடம் பேசுகையில், ‘நாங்கள் மழை காலத்தில் மட்டுமல்லாமல் மழைக்காலம் முடிந்த பின்பும் இங்கு தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீரில் வாழ்ந்து வருகிறோம். ரோடு வசதி இல்லை, கான் வசதி இல்லை, அடிப்படை வசதி இல்லாதவற்றை ஒவ்வொரு குறைகளாக எடுத்துக் கூறினர். ஒவ்வொரு தெருவாக நடந்தே சென்று நிர்வாகிகளுடன் எஸ்.பி.மாரியப்பன் பகுதிகளை பார்வையிட்டார். பொதுமக்கள் அடைந்து வரும் இன்னல்களை பார்வையிட்ட மாரியப்பன் இதனை உடனடியாக சரி செய்ய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு தெரியப்படுத்துவேன் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பி.மாரியப்பன் தெரிவிக்கையில்: கதிர்வேல் நகர் 2வது தெரு மற்றும் கதிர்வேல்நகர் பாரதி தெரு, திருவிகநகர், பகுதிகளில் மழைநீர் நீண்ட நாட்களாக தேங்கியிருப்பதால் தீவுகளில் வசிப்பது போல் குடியிருப்புவாசிகள் இருந்து வருகின்றனர். தொடர்ந்து இந்த பகுதியை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால் கழிவுநீர் அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் குடியிருந்து வரும் குடியிருப்புவாசிகள் பலர் வீடுகளை காலி செய்து விட்டு இடபெயர்ந்த நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், போர்கால அடிப்படையில் மேற்கண்ட பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீர், கழிவுநீர்களை ராட்ஷச இயந்திரங்கள் மூலம் நீரை உறிஞ்சி அப்புறப்படுத்தப்படுத்தி சுகாதாரத்தை காக்க வேண்டும். மேலும், சாலையின் இருபுறங்களிலும் கான் வசதி இல்லாததால் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பாசிபடிந்த இந்த கழிவுநீரில் பொதுமக்கள் நடந்து செல்வதால் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுபோல் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகையால், தற்காலிகமாக புதிய சாலைகள் அமைக்காவிட்டாலும் கிரஷர் மணல் அமைத்து சாலைகளில் பொதுமக்கள் நடப்பதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என தெரிவித்தார். பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் இந்த இன்னல்களை உடனடியாக சீர் செய்ய முன்வராமல் காலதாமதம் ஆகும் பட்சத்தில் அப்பகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க அமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
அப்போது, அமைப்பின் பொதுச் செயலாளர் மில்லை தேவராஜ், துணை செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ், மாவட்ட தலைவர் வேல்முருகன், இளைஞரணி சிவா, அழகுதுரை மற்றும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க அமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

