தூத்துக்குடியில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் வந்த வேன் ஒன்று திருநெல்வேலியில் உள்ள நகைக்கடைகளில் நகைகளைப் ஒப்படைத்த பின்னர் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த வேன் தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை டோல்கேட் பகுதிக்கு வந்தபோது பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் இருந்தது.
அதற்குரிய ஆவணங்கள் இருந்தது. எனினும் அந்த வேனில் வந்த பாதுகாவலரான முன்னாள் ராணுவ வீரர் மனுவேந்தி என்பவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிய அனுமதி இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், நகைகள் மற்றும் துப்பாக்கியுடன் வேனை பறிமுதல் செய்து ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

