தூத்துக்குடி,பிப், 10
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் கலெக்டர் இளம்பகவத்திடம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்பி மாரியப்பன் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த கோரிக்கை மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது: இந்திய திருநாட்டை வழிநடத்துவது ஜனநாயகத்தில் உள்ள நான்கு தூண்கள் ஆகும்;. அந்த தூண்களில் ஒன்றான பத்திரிகை துறையின் பங்கு இன்றியமையாதது. குறிப்பாக, அரசு துறை சார்ந்த செய்திகளை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்த்து ஆட்சியாளர்களுக்கு பெருமை சேர்க்கும் துறையாகும். இதையும் கடந்த அரசியல்கட்சி தலைவர்களுக்கும் துணையாக இருந்து அவர்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருவது பத்திரிகை துறை தான். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் 1986ம் ஆண்டு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தை பிரித்து தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கி 38 ஆண்டுகள் ஆன நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டத்தின் தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா இன்று வரை வழங்கப்படாமல் கானல்நீராக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக வீட்டுமனை பட்டாக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு 30 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவும் கிடைக்கவில்லை.
ஆகையால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனை பட்டா வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு உடனே வழங்கிட வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது மனுவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன் தெரிவித்திருந்தார். அவருடன் கட்சியின் மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், இளைஞர் அணி நிர்வாகி சிவக்குமார், மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

