தூத்துக்குடி, பிப், 10
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பேருராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும், என பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என்.ஆர்.தனபாலன் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத்திடம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன் கோரிக்கை மனு அளித்தார்.
அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாயர்புரம் பேருராட்சியாக இருந்து வருகிறது. அந்த பகுதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் முன்மொழிந்த கோரிக்கையை பெருந்தலைவர் மக்கள் கட்சியும் முன்னெடுத்து பல வழிகளை கையாண்டது.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சாயர்புரம் பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் முடிவு பெறும் தருவாயில் இருந்து வருகிறது. சாயர்புரம் சுற்றுவட்டார பகுதியில் தேசப்பற்று மிக்கவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் 9 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி நடத்தி, இன்று வரை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பெருந்தலைவர் என்ற பெயரோடு வாழ்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளும் முழுமையாக நிறைவேற்றி 24 மணி நேரமும் பொதுமக்கள் அந்த புதிய பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மின்விளக்குகளும் அமைத்துக் கொடுத்து மாணவர்கள், பெண்கள், விவசாயிகள், அனைத்து கட்சி மற்றும் சமுதாய மக்களின் பேராதரவோடு இப்பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய பேருந்து நிலைய பயன்பாடு சிறப்பாக அமைய தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் சாயர்புரம் பேருராட்சி நிர்வாகமும் முன்னேற்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்டத்தலைவர் எஸ்.பி.மாரியப்பன் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்திருந்தார். அப்போது பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட பொருளாளர்
மில்லை தேவராஜ், இளைஞரனி நிர்வாகி சிவக்குமார், மற்றும் சாயர்புரம், சேர்வைக்காரன்மடம் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

