கந்தர்வகோட்டை டிச 28
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சியில் வானவில் மன்றத்தின் சார்பில் கிராமம் தோறும் அறிவியல் திருவிழாக்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் ரகமத்துல்லா தலைமை வகித்து பேசும்பொழுது ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு வானவில் மன்றம் கருத்தாளர்கள் அறிவியல் பரிசோதனைகள் ஒவ்வொரு மாதமும் செய்து காண்பிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் அறிவியல் பரிசோதனைகளை உற்று நோக்கி அறிவியல் மனப்பான்மைய வளர்த்துக் கொள்கிறார்கள். வானவில் மன்றத்தின் தொடர்ச்சியாக அறிவியல் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட அறிவியல் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றது. அதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி சான்றிதழ் வழங்கப்படுகிறது. கிராமம் தோறும் அறிவியல் திருவிழாக்கள் மூலம் மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அறிவியல் கருத்துக்களை அறிந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பாரதிதாசன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் முகேஷ் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய மாதிரியை செய்திருந்தார். மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவரிடம் கேள்வி கேட்டார்.
மாணவர் மழைநீர் சேகரிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகளை விளக்கி பேசும்பொழுது
மழைநீர் சேகரிப்பு என்பது மழை பெய்யும் இடத்திலேயே மழைநீரை சேமித்து கோடைகாலத்தில் தண்ணீர் பயன்பாட்டிற்கும், நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு எளிய முறை. இது வறட்சியை தடுக்கவும், வெள்ள அபாயத்தை தடுக்கவும் உதவுகிறது.
மழைநீரை வீணாக ஓடவிடாமல், ஓரிடத்தில் சேகரிப்பதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.குறிப்பாக ஆறு, குளம், ஏரி, ஊரணி போன்றவற்றில் மழைநீர்வரத்து இருந்தால், சுற்றுப்புறமுள்ள அனைத்து திறந்த வெளி கிணறுகள் மற்றும் ஆழ் துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.
மழைநீரை நேரடியாக பெரிய தொட்டிகளிலோ அல்லது பூமிக்குள் செலுத்தியோ சேகரிக்கலாம்.
தொட்டிகளில் சேகரிப்பதில் ஒரு குறிப்பிட்ட அளவு மழைநீர் மட்டுமே சேகரிக்க இயலும். மாறாக பெய்கின்ற மழைநீரை வீணாக ஓட விடாமல், பூமிக்குள் செலுத்த வழிவகை செய்வது சிறந்ததாகும்.
எனவும் பேசினார்.
மாணவரைப் பாராட்டி மேலும் இது போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் பவளப்பாறைகள், உயிர்க்கோளம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை குறித்து பேசினார். வானவில் மன்ற கருத்தாளர்கள் தெய்வீக செல்வி வசந்தி ஆகியோர் கிராமப்புற அறிவியல் திருவிழாக்கள் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி உறுப்பினர் பழனிவேல் உள்ளிட்ட மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

