தூத்துக்குடி, டிச, 24
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமையில், மாவட்ட கலெக்டர் இளம் பகவத்திடம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய அனைத்து நிலங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கடம்பூர் ராஜீ எம்எல்ஏ கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எட்டயபுரம், விளாத்திகுளம் தாலுகாவில் சுமார் 1 லட்சம் ஏக்கர் மானாவரி விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த புரட்டாசி முதல் வாரத்தில் இந்த நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சூரியகாந்தி போன்ற பயிர்கள் பயிரிட்டனர்.

இந்த நிலங்களை உழவு செய்து களை பறிக்க மருந்து தெளித்து, உரம் இட்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் முப்பதாயிரம் வரை செலவு ஏற்பட்டது. இது தவிர கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கன் படைப்புழு எனப்படும் குருத்துப்பூச்சி தாக்குதல் பெரும் சேதமாகி வருகிறது. மக்காச்சோளப் பயிர்களை காட்டுப்பன்றிகள் பெரும் சேதப்படுத்தி வருவதோடு இந்த நிலையில் கடந்த வாரம் இரண்டு நாள் பெய்த பெருமழையால் குறைந்தகால வித்துக்களான உளுந்து, பாசி, கொத்தமல்லி, வெங்காயம் மிளகாய் போன்றவைகள் வெள்ளச்சேதம் ஏற்பட்டு அழுகி விட்டது.
இது தவிர பல கிராமங்களில் குளம், குட்டைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மழை ஒருபுறம் பாதிப்பு என்றால் மற்றொருபுறம் காட்டுப்பன்றி, மான்களால் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஐந்து ஏக்கர் என்ற வரம்பை தளர்த்தி முழுமையாக நிவாரணம் வழங்கினார். ஆனால் கடந்த 2023ம் ஆண்டு விவசாயி எத்தனை ஏக்கர் பயிரிட்டு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மட்டுமே நிவாரணம் வழங்கியது. இதனால் 5 ஏக்கருக்கு நிவாரணம் மேல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு போல் 5 ஏக்கர் என்ற வரம்பு நிர்ணயம் செய்யாமல் விதிகளை தளர்த்தி பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், மாநில வழக்கறிஞரணி துணைச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, புதூர் சேர்மன் முனிசக்தி, ஒன்றிய செயலாளர்கள் கணபதி, பரமசிவம், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் துரைச்சாமி, மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

