தூத்துக்குடி.
கடந்த ஜுலை 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டல அலுவலகங்களிலும் குறை தீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி தொடர்ச்சியாக சுழற்சி முறையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மில்லர்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமிற்கு மண்டல தலைவர் அன்னலெட்சுமி தலைமை வகித்தார்.
குறை தீர்க்கும் முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: மாநகராட்சி பகுதியில் கடந்த 6 மாத காலமாக தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க இதுபோன்ற குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தன. தற்போது எழுபது மனுக்கள் வரை வருகிறது. இதில் கொடுக்கப்படும் மனுக்களில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு துறைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. சாலை, கால்வாய் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மட்டும் அந்த பகுதியின் நிலைமைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்து வரிசைப்படுத்தி செய்து வருகிறோம். கடந்த மாதம் 20ம் தேதி பெய்த மழையால் சில பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதையும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. குறிப்பாக, இந்த மண்டலத்திற்குட்பட்ட 16,17,18 ஆகிய வார்டு பகுதிகளில் 70 சதவீதம் பேர் குடியிருந்து வருகின்றனர். 30 சதவீதம் பேர் தங்களது குடியிப்பை வெளியூரில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்குரிய காலிமனைகளில் மழைநீர் தேங்குவதால் அருகில் உள்ள மற்றப்பகுதிகளுக்கும் நிரம்பிச் செல்வதன் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது. அதையும் பல்வேறு வகையில் வெளியேற்றி வருகிறோம். இருப்பினும், காலிமனைகளை சார்ந்த சுமார் 500 பேர்கள் கண்டறியப்பட்டு, தங்களுக்குரிய இடத்தில் சமநிலைப்படுத்தி மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதார துறையின் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் மருந்து அடிக்கப்பட்டு, அப்பகுதியில் மருத்துவ முகாமும் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு வரும் நிதி மூலம் எல்லா பகுதிகளுக்கும் முறையாக சாலை வசதிகள், கால்வாய் வசதிகள் செய்து கொடுப்போம். மாநகராட்சிப் பணிகளுக்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம். இதுபோன்ற முகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளின் தகவல்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை ஊடகத்துறையினர் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் பொதுமக்கள் காலிமனை வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்குதல், காலிமனைகளில் குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி கோருதுல், பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். அதில் 1 மணி நேரத்தில் உடனடியாக பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பத்தவருக்கு சான்றிதழை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில், உதவி ஆணையர்கள் பாலமுருகன், இர்வின் ஜெபராஜ், நகரமைப்புத் திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், இளநிலை பொறியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, பகுதி சபா உறுப்பினர்கள் செல்வராஜ், ஜெபக்குமார் ரவி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, கனகராஜ், பொன்னப்பன், விஜயலெட்சுமி, ஜாண், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மக்கள் வாழ்வாதார இயக்கச் செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவன் யாதவ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பர், பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் வேல்சாமி, அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

