திருச்செந்தூரில் பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு டவுன் பஸ் மற்றும் மின் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தாெடர்பாக தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் எம்பவர் சங்கர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி காலத்தில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோவில் பேருந்து நிலையத்திற்கு டவுன் பஸ் ஒடி கொண்டு இருந்தது.
பக்தர்கள் சிரமம் இல்லாமல் சென்று வந்து கொண்டு இருந்தார்கள். ஆனால் சுமார் மூன்று நாட்களாக அந்த பேருந்து இயங்கவில்லை. பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி மிகவும் கஷ்டமாக உள்ளது. சனி, ஞாயிறு போன்ற நாட்களில் ஐயப்ப பக்தர்கள் வாகனம் திருச்செந்தூர் முழுவதும் நிற்கிறது. பாதசாரிகள் நான்கு சக்கர மூன்று சக்கர வாகனங்களும் போக முடியவில்லை. அனைத்து பேருந்துகளும் பகத்சிங் பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு மினி பஸ் மற்றும் டவுன் பஸ் மூலமாக பக்தர்கள் செல்ல வழி செய்யவும், நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பஸ் போக்குவரத்து குறைவாக காணப்படுவதால் ஆட்டோக்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் முருக பக்தர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது .

