தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தாலுகா, சேர்வைக்காரன்மடம் காமராஜ் நகர் பகுதியைச் சார்ந்த பாஸ்கர் மகன் சத்தியதாஸ் என்ற கதிர் என்பவர் சாயர்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அந்தோணிராஜ் மீது பரபரப்பு புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். நான் கடந்த 24.07.2024 அன்று சாயர்புரத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்த சூசை அந்தோணிராஜ் என்பவர் மீது புகார் மனு கொடுத்திருந்தேன். அந்த புகார் மனு சார்பாக இதுவரை எந்தவொரு விசாரணையும் நடைபெறவில்லை. அவர் தொடர்ந்து எனது முன்னாள் ஓனர் S.P. மாரியப்பன் என்பவர் மீது தொடர்ந்து பொய் புகார் அளிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அதற்கு நான் மறுப்பு தெரிவிப்பதால் அவரும் அவருடன் பணிபுரிகின்ற சக ஊழியரான ஜெயகோபால் என்பவரும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். சூசை அந்தோணிராஜ் என்பவர் மாரியப்பன் என்பவரிடம் வாடகைக்கு வீடு பார்த்து தருமாறும் அதை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் அடிக்கடி மாமூல் கேட்டும் பிரச்சனை பண்ணி வந்ததால் ஏற்கனவே மாரியப்பன் மீது முன்விரோதத்தில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக மாரியப்பன் என்பவரிடம் டிரைவராக பணிபுரிந்த என்னை வைத்து மாரியப்பன் என்பவர் மீது பொய் புகாரளித்து அவரை கைது செய்ய வேண்டும் என ஆக்ரோஷத்தில் இருக்கிறார். இதற்கு உடந்தையாக சகாயராஜ் என்பவர் உதவி ஆய்வாளருக்கு உடந்தையாக இருக்கிறார். எனவே எனது மனுவினை விசாரித்து என் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மேலே கண்ட மூவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாயர்புரம் காவல் உதவி ஆய்வாளர் மீது இளைஞர் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் அளித்துள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

