நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடியில் அக்கட்சியின் வேட்பாளர் வேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தார். குரூஸ் பர்னாந்து சிலை அருகே கூடியிருந்த மக்களிடையே அவர் பேசுகையில், “தமிழகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள். மாறி மாறி திராவிட கட்சிகளுக்கே வாக்களித்தால் மாற்றம் எப்படி வரும்?. இரண்டுமே ஊழல் கட்சிகள். தண்ணீரை விற்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மருத்துவம், கல்வியை இலவசமாக வழங்குவோம். அனுமின் நிலையம், அனல்மின் நிலையங்களை ஒழித்துவிட்டு மாற்று வழியில் மின் திட்டங்களை வழங்குவோம். தூத்துக்குடியில் இருந்த நச்சு ஆலையை மூடுவது அரசின் கொள்கை என்றார்கள். ஆனால் ஆலையை மூடுமாறு ஊர்வலமாக சென்றவர்களை சுட்டுக் கொன்றார்கள்.
மனு கொடுக்க சென்ற 5பேரையாது ஆட்சியர் அனுமதித்திருக்கலாம். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 500பேர் மீது காவல் துறை பொய் வழக்கு போட்டுள்ளது. கசக்கிப் பிழிந்தாலும் இனிப்பை தரும் கரும்பை போல, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ் கைகட்டி உங்களுக்கு பணியாற்றும் மக்கள் சேவகனாக திகழ்வார். அவருக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெறச்செய்யுங்கள் என்று பேசினார்.

