சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு போட்டியிடுகிறார்.
இதையொட்டி, நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் குஷ்பு பங்கேற்றார். அப்போது ரொம்பவே உணர்ச்சி மிகுந்தவராக இருந்தார் குஷ்பு. நான் வெற்றி பெற வேண்டும் என்று தனது தாய், கடவுளை வேண்டி வருவதாகவும், தாய் இல்லாமல் நான் இல்லை என்றும் குஷ்பு கூறினார்.
கொஞ்சம் கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். தனது தாய்தான் சிறு வயதிலிருந்து தன்னை வளர்த்தார் என்று குஷ்பு கூறும்போது அவரையும் அறியாமல் குரல் உடைந்து போய் விட்டது. கண்களில் கண்ணீர் வடிந்தது. அதை துடைத்தபடியே பேசினார்.
குஷ்பு உடைந்துபோனதை பார்த்த பாஜக தொண்டர்களும் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர். இதனால் அந்த இடமே நெகிழ்ந்து போனது. பிறகு தன்னை தேற்றிக் கொண்டு வழக்கமான அழுத்தம் திருத்தமான பேச்சை ஆரம்பித்தார் குஷ்பு. இதன்பிறகுதான் அந்த இடமே இயல்பு நிலைக்கு வந்தது.

குஷ்பு காங்கிரசில் மற்றும் அதற்கு முன்பு திமுகவில் இருந்தபோது, போட்டியிட சீட் கேட்கவில்லை என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். பாஜகதான் தனக்கு சீட் தந்து கவுரவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குஷ்பு போட்டியிட சீட் கேட்டார். அது தர மறுக்கப்பட்டதால், அவர் பாஜகவில் சேர்ந்தார் என்பதுதான் பரவலான பேச்சு. ஆனால், தான் சீட் கேட்கவில்லை என கூறியுள்ளார் குஷ்பு.

