தூத்துக்குடி.
தூத்துக்குடி அருகே பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா ஸ்கிப்பிங், தொடர்ச்சியாக நிஞ்சாக் சுழற்றி 3 நோபல் உலக சாதனை படைத்துள்ளார்.
போதை போன்ற தவறான வழிகளில் இளைஞர்கள் போகக்கூடாது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஸ்பிக்நகர் கீதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக இளைஞர்கள் தின விழா மற்றும் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அந்தோணி அதிஷ்டராஜ் தலைமை வகித்தார்.
இவ்விழாவின் போது, பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா, தனது முதுகில் 30.3 கிலோ எடையுள்ள பாரத்தை சுமந்து கொண்டு தொடர்ச்சியாக 3 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் விளையாட்டில் ஈடுபட்டு, 366 சுற்றுகளை பெற்று உலக சாதனை படைத்தார். மேலும் இரு கைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் 11 நிமிடம் நிஞ்சாக் சுழற்றியும், அரை மணி நேரம் ஒரு கையை பயன்படுத்தி நிஞ்சாக் சுழற்றி என 3 நோபல் உலக சாதனைகளை நிகழ்வு படைத்துள்ளார். இதன் நடுவர்களாக நோபல் உலக சாதனை நிறுவனத்தின் மாநில தலைமை செயல் அலுவலர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், தேசிய அமைப்பாளர் எம்.கே.பரத் குமார் ஆகியோர் இருந்தனர்.
இதனை தொடர்ந்து, ஆர்யா உலக சாதனை பெற்றுள்ளதாக, நடுவர்கள் அறிவித்ததுடன், அவருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதனையடுத்து, ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் முத்துசாமி, ரேவதி, ஸ்கிப்பிங் பயிற்சியாளர் ஐயப்பன் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி 3 நோபல் உலக சாதனைகளை நிகழ்த்திய 19 வயது இளைஞர் எம்.ஆர்யாவை வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், தமிழர் முன்னேற்றக் கழகம் மாநில இளைஞரணிச் செயலாளர் கந்தன் கரிகாலன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் ரத்தினசாமி, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட துணைத்தலைவர் அந்தோணி சாமி, வடக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் பெருமாள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜோஸ்பர் பிரபாகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

