பனங்காட்டு படை கட்சி சார்பில் தமிழகத்தில் 44 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பனங்காட்டு படை கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது கட்சியின், தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலில் பேசிய ஹரி நாடார், தமிழகத்தில் 44 தொகுதியிலும் கேரளாவில் 2 , புதுச்சேரியில் 5 தொகுதிகளில் பனங்காட்டு படை கட்சி போட்டியிடுகிறது. இதில் ஹரி நாடார் ஆகிய நான், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறேன். எங்கள் தேர்தல் அறிக்கை 2 நாட்களில் வெளியிடப்படும் என்றார். எங்கள் ஜாதியை பாஜக பிரிக்க கூடாது, நாங்கள் எப்போதும் ஒற்றுமைக்கு பெயர் போனவர்கள் எங்களை ஒருபோதும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சசமீபத்தில் நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் 3வது இடம் பனங்காட்டு படை கட்சி பிடித்தது. இந்த வெற்றி பல முக்கிய கட்சியினரை புருவம் உயர்த்த செய்தது.
இந்நிலையில் கட்சிக்கு செல்வாக்கு மிக்க தென் மாவட்ட தொகுதிகள் அனைத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

