தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளைசாமி மகன் முத்துமாரியப்பன் (50) என்பவர் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சேர் கடையில் டிரை சைக்கிள் ஓட்டிவந்துள்ளார். இவரும் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை சேர்ந்த மணி மகன் வேல்சாமி (45), ஆழ்வார்திருநகரி யாதவர் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் கணேசன் (34) ஆகிய மூவரும் நண்பர்கள். கடந்த சில தினங்களுக்கு முன் முத்துமாரியப்பனுக்கும் வேல்சாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக இன்று (17.03.2021) அதிகாலை முத்துமாரியப்பன் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் தான் வேலை பார்க்கும் சேர் கடைக்கு அருகில் தனது டிரைசைக்கிளில் தூங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த வேல்சாமி மற்றும் கணேசன் ஆகியோர் சேர்ந்து முத்துமாரியப்பனை கம்பால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துமாரியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் உதவி ஆய்வாளர் முருகபெருமாள், தலைமை காவலர்கள் கணேசன், முருகேசன், தனிப்பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மேற்படி குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை சேர்ந்த மணி மகன் வேல்சாமி மற்றும் ஆழ்வார்திருநகரி யாதவர் தெருவை சேர்ந்தவ கண்ணன் மகன் கணேசன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்மந்தப்பட்ட நபர்களை 5 மணி நேரத்தில் விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.



