தூத்துக்குடி
தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிட வேண்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 829 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,38,502 குடும்ப அட்டைகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடத்தப்படும் 108 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 80,872 குடும்ப அட்டைகளுக்கும், இதர வகை கூட்டுறவு நிறுவனம் மற்றும் சுய உதவிக்குழு மூலம் நடத்தப்படும் 20 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 6,695 குடும்ப அட்டைகளுக்கும், 3 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 492 குடும்ப அட்டைகளுக்கும் என மொத்தமாக 960 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,26,561 தகுதியான குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 10ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி போல்பேட்டை செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும், இலவச வேஷ்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில் மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் தெய்வேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராஜாமணி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர தொழிலாளர் நல அணி துணை அமைப்பாளர் ரமேஷ், வட்ட பிரதிநிதி பேச்சிமுத்து, மற்றும் அற்புதராஜ், ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

