தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இருந்து தற்போது மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு ஒருசிலர் திரும்பியுள்ள நிலையிலும் இன்னும் முற்றிலுமாக பழைய நிலைக்கு திரும்ப முடியாமலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் பலர் இருந்து வருகின்றனர்.
மழை வெள்ளத்தால், ஆடு, மாடுகள் உயிரிழப்பு, பைக், கார்கள் சேதம், சிறு குறு வியாபாரிகளின் பொருள் இழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மழைவெள்ள பாதிப்பை அறிந்த உடனே முதலமைச்சர் உடனடியாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தூத்துக்குடி மாநகருக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் களமிறங்கி பணியாற்றிய நிலையில் தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கியும், ஆடு, மாடு, வீடு இழந்தவர்களுக்கான இழப்பீடு தொகையையும், உயிரிழந்தவர்களுக்கான வெள்ள நிவாரண தொகையையும் அறிவித்தார்.
பின்னர், மத்திய அரசு அதிகாரிகளும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, சக்கரபாணி, மூர்த்தி, மனோ தங்கராஜ், தங்கம் தென்னரசு, கலெக்டர் லட்சுமிபதி, உள்ளிட்ட பல உயரதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பணியாற்றினார்கள்.
இதுகுறித்து தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்: மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி மாநகராட்சி நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போர்கால அடிப்படையில் மேற்கொண்டிருந்தது. ஆனால் சராசரியாக பெய்ய வேண்டிய அளவை விட கூடுதலாக மழை பெய்ததால், அணைகளில் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. அதன் மூலம் உபரிநீர் வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்று வெள்ளநீர் ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக மாநகர அருகில் உள்ள கோரம்பள்ளம் குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டத்தால் வெள்ளநீரும், காட்டாற்று வெள்ளமும், கரைபுரண்டு ஓடியதால் பல்வேறு பாதிப்புகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு பணிகளை முன்னின்று எம்.பி, அமைச்சர்கள், கலெக்டர், உயரதிகாரிகள், மாநகராட்சி ஆணையர், காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் உடனிருந்து போர்கால அடிப்படையில் பணியாற்றி வந்த நிலையில் தமிழகத்தில் தலைநகர் சென்னை மாநகராட்சி முதல் பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், அதிலும் குறிப்பாக சுமார் 1000 தூய்மை பணியாளர்கள் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றினார்கள். தமிழகம் முழுவதும் இருந்து வரபெற்ற நிவாரண பொருட்களை எவ்வித பாரபட்சமுமின்றி பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிக்கும் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளோம். அந்த வேளையில் எங்களுக்கு மூக்கணாங்கயிறு போல் ஊடகத் துறையைச் சார்ந்தவர்கள் நடந்தவற்றை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டியும் குறைகளை சுட்டிக்காட்டி எங்களை பணிசெய்ய வேகப்படுத்தியதையும் எண்ணிப் பார்த்து இக்கட்டான சூழ்நிலைகளில் பொதுமக்கள் நலன் முக்கியம் என்று எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல்வேறு உதவிகளை மாநகர மக்களுக்கு செய்த தொண்டு நிறுவனங்கள், சமூகஆர்வலர்கள், அவர்களோடு இணைந்து பணியாற்றி, துணை நின்ற அனைவருக்கும் தூத்துக்குடி மாநகர மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி மறவேன் எந்நாளும் உழைப்பேன், என்று தெரிவித்தார்.

