தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் கன மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம், மலர்குளம் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் தூத்துக்குடி மாநகருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் தவித்தனர். இதனையறிந்த வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் உத்தரவின்பேரில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசித்த மக்களை பாதுகாப்பாக மீட்கும் வகையில் வடக்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் மோட்டார் பொறுத்திய 6 பைபர் படகுகள் உள்பட 30 அடி நீளமுள்ள 24 படகுகளில் சென்று முத்தம்மாள் காலனி, ரஹ்மத்நகர், ஆதிபராசக்திநகர், மச்சாதுநகர், குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண் மற்றும் ஆண் காவலர்கள் துணையுடன் ஒவ்வொரு படகிலும் சுமார் 20 நபர்களை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.


இந்த கொடூரமான மழை வெள்ள பாதிப்பால் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் முழுமையான தனது உயிரை துச்சமென மதித்து இரவு-பகல் பாராமல் மக்கள் நலன் தான் முக்கியம் என்று அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிற்கேற்ப பணியாற்றி ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றினார்கள். அந்த நேரத்தில் ஆட்சிய பணிகளுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் மனதார பாராட்டினார்கள். அதன் பின் 20ம் தேதி பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் வந்து சில பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் கூறுகையில: கடந்த காலங்களில் பார்த்த மழைக்கும், இப்போது பெய்த மழைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஓராண்டில் சராசரியாக குறிப்பிட்ட செ.மீ. அளவு மழை பொழியும் என்ற அளவு மாநில வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் கூறப்படும். இந்தாண்டு மழையின் அளவு குறைவாக உள்ளது என்று கூறியிருந்த நிலையில் கடந்த 17, 18 ஆகிய இரு தினங்களில் பெய்த அதி கனமழையால் மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தையே புரட்டிப்போட்டு விட்டது. இதில் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற பலரையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டில் மீனவர்கள் கொண்டு வந்த பைபர் படகு மூலம் மீட்கப்பட்டு எனது குடும்பத்தில் 5 பேர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்து உணவு உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கி எங்களை காப்பாற்றியதற்கு நாங்கள் நன்றி கடன்பட்டவர்களாக இருப்போம் என்று தெரிவித்தார்.
வெள்ளம் ஊருக்குள் புகுந்த அபாய கால கட்டத்தின் போது தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய நபர்கள் இன்று வரை வெளிஉலகத்திற்கு தெரியாமலே உள்ளனர். தக்க சமயத்தில் இதுபோன்ற பணிகளை மேற்கொண்டவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்களே.

