வருகின்ற தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பாதுகாப்பு ரோந்து வாகன காவல்துறை அதிகாரிகளுடன் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வருகின்ற ஏப்ரல் மாதம் 06ம்தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் 6 காவல் ஆய்வாளர்களும், 6 தொகுதிகளுக்கும் தலா ஒரு உதவி ஆய்வாளர்/ சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 158 மொபைல் பார்ட்டியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி 213 – விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. மீராள் பானு அவர்களும் 29 மொபைல் பார்ட்டியும், 214 – தூத்துக்குடி தொகுதிக்கு தெர்மல்நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி அவர்களும் 26 மொபைல் பார்ட்டியும், 215 – திருச்செந்தூர் தொகுதிக்கு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இந்திரா அவர்களும் 25 மொபைல் பார்ட்டியும், 216 – ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லெட்சுமி பிரபா அவர்களும் 21 மொபைல் பார்ட்டியும், 217 – ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாரியம்மாள் அவர்களும் 29 மொபைல் பார்ட்டியும் மற்றும் 218 – கோவில்பட்டி தொகுதிக்கு கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகக்குமாரி அவர்களும் 28 மொபைல் பார்ட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தொகுதி ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு 04.04.2021 முதல் 07.04.2021 வரை சம்மந்தப்பட்ட மண்டல அதிகாரிகளுடன் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களை தாலுகா அலுலகங்களிலிருந்து பெறப்பட்டதிலிருந்து, அவற்றை சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மையத்தில் ஒப்படைத்து, வாக்குப்பதிவு முடிவடைந்து, அவற்றை வாக்கு எண்ணும் இடத்தில் ஒப்படைக்கும் வரை காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் சிறப்பு காவல்துறையினர் என்னென்ன பணிகளை, எவ்வாறு மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



