தூத்துக்குடி
தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி சாமுவேல்புரம் பகுதியில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பினா ரொட்ரிகோ தலைமை வகித்தார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ, மாணவியர்கள் 70 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசுகையில்: தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. 6 முதல் 12 வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் இந்த பள்ளிக்கூடத்தின் மூலம் இந்த பகுதி ஏழை எளியவர்கள் படித்து வருவது மட்டுமின்றி பயனடைந்தும் வருகின்றனர். 802 மாணவ, மாணவியர்கள் படிக்கும் இந்த பள்ளியில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்றப் பின் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதன் மூலம் மாணவ-மாணவியர்களின் சேர்க்கையும் அதிகரித்து உள்ளது. எதிர்கால நவீன இந்தியாவை உருவாக்கும் கடமை மாணவ-மாணவியர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. நான் படிக்கும் காலத்தில் சைக்கிளில் தான் வருவேன். இப்போது இருப்பது போன்று பல நவீன வசதியான சாலைகள் கிடையாது. இருந்தாலும் தினமும் 10 கி.மீ தூரம் சென்று படித்து வருவேன். இந்த சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயலாற்றுகின்றன. அதன் மூலம் நமக்கு உற்சாகம் கிடைக்கும். ஆரோக்கியமான உடல்நலம் இருந்தால் தான் அனைத்தையும் எதிர்கொண்டு நாம் சாதிக்க முடியும். ஒரு மருத்துவரிடம் போய் ஆலோசனை கேட்டால் கூட தினமும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று தான் கூறுவார். 12ம் வகுப்பு வரை படிக்கும் போதே உங்களுக்கு அரசு பல சலுகைகள் வழங்குகின்றன. அதோடு படிப்பை நிறுத்தி விடாமல் கல்லூரி படிப்பையும் தொடர வேண்டும். புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்வி ஊக்கத்தொகையாக அரசு ரூ.1000 மாதந்தோறும் வழங்குகிறது. தமிழர்களின் அடையாளம் இந்தியாவையும் கடந்து உலகம் முழுவதும் உள்ளன. அதை பேணிப் பாதுகாக்கும் வகையில் நீங்களும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு நல்ல அறிவாற்றல் மூலம் உங்களை பெற்றெடுத்த தாய், தந்தையர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். தமிழகத்தில் நீங்கள் கற்ற கல்வியின் மூலம் வெளிநாடுகளிலும் தங்களது அடையாளத்தை உழைப்பின் மூலம் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
விழாவில், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் மெட்டில்டா, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜோஸ்பர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
உதவி தலைமையாசிரியர் கிரேஸ் கெத்ஸிபாய் நன்றியுரையாற்றினார்.

