தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி 60 வார்டு பகுதிகளிலும் பாரபட்சமின்றி புதிதாக தார்சாலை கழிவுநீர் கால்வாய் மின்விளக்குகள் பூங்காக்கள் பேவர் பிளாக் சாலைகள் என அனைத்து அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் சென்னை, கோவை, மதுரை, பெங்களுர், வேலூர், பாண்டிச்சேரிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதில் மற்றொரு பகுதியில் ஆம்னி பேருந்துகள் வந்து செல்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. மழை காலங்களில் அப்பகுதியில் மழைநீர் தேங்குவதால் சில பாதிப்புகள் ஏற்படுவதாக தகவல் வந்ததையடுத்து அப்பகுதியில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கூறுகையில் வளர்ந்து வரும் மாநகருக்கு ஏற்ப கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும் பொதுமக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்திலிருந்து வடமாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய இட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கும் நிற்பதற்கு இடம் ஓதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர்களும் வைத்த கோரிக்கைகளை ஏற்று அப்பகுதியில் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளோம். இப்பணியை முழுமையாக ஓப்பந்ததாரர்கள் முடிக்கும் வரை ஏற்படும் சில இடையூறுகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். நல்ல தரமான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

