தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கதிர்வேல்நகர், திரவியரத்தினநகர், அன்னை தெரசா நகர், ராஜீவ்நகர், முருகேசன்நகர், முத்துகிருஷ்ணா நகர், பாரதி நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுற்றியுள்ள ஆகிய பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் தேங்கிய பகுதிகளில் நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் பல நாட்களாக மழைநீர் செல்வதற்கு தடையாக இருந்த சாலையை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் மின்மோட்டார்கள் இல்லாமல் புவிஈர்ப்பு விசையில் புதிய வடிகால் பணிகள் நடைபெறும் மாநகர பகுதிகளில் ஏற்கனவே சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். தற்போது மீதமுள்ள பகுதிகளிலும் வரும் நாட்களில் பணிகள் விரைந்து நடைபெறும் என்று உறுதியளித்தது மட்டுமின்றி, தனிநபர் இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தால், அந்த பள்ளங்களை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி மாநகர மக்களை கேட்டுக்கொள்கிறேன், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார்.
சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், கவுன்சிலர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

