நவ.17இல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி, நவ.13:
தூத்துக்குடியில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான “ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்த கலைஞர்” என்ற தலைப்பிலான கருத்தரங்கு வரும் 17ஆம்தேதி நடைபெறவுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, திமுக மாநில மகளிர் தொண்டரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெயர் மாற்றத்தின் மூலம் மட்டுமல்லாது பல்வேறு சீர்மிகு திட்டங்களின் வாயிலாகவும் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளை முன்னேற்றம் அடையச் செய்தவர் கருணாநிதி என்பதை விளக்கும் வகையில், ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்த கலைஞர் என்ற தலைப்பிலான கருத்தரங்கு தூத்துக்குடி ஆறுமுக நாடார் திருமண மண்டபத்தில் வரும் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு எனது தலைமையில் நடைபெறுகிறது.
இதில், மாநில மகளிர் தொண்டரணிச் செயலர்கள் ஹெலன் டேவிட்சன், நாமக்கல் ராணி, துணைச் செயலர் விஜிலா சத்தியானந்த், பிரசாரக் குழு செயலர் ஜெஸி பொன்ராணி, திமுக மாநகரச் செயலர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விழா பேருரை ஆற்றுகின்றனர். இக்கருத்தரங்கில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மேயர் ஜெகன்பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரிய உறுப்பினரும், திருநங்கையுமான பியூட்டி, தென்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நலச்சங்கத் தலைவர் பியர்சில், விளாத்திகுளம் அக்லூட் மாற்றுத்திறனாகள் பள்ளியின் தாளாளர் தினேஷ் கனகராஜ் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலெட்சுமி வரவேற்புரை ஆற்றுகிறார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி நன்றி கூறுகிறார். இக்கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்பட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை கெüரவித்து விருதுகள் வழங்கப்படவுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவையை விண்ணப்பங்களாக பெற்று அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்நிகழ்ச்சியில், திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

