தூத்துக்குடி.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு 57 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் ரூ.57 கோடி மதிப்பில் 4 தளங்களாக பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தரை தளத்தில் 20 கடைகளும், முதல் தளத்தில் 49 கடைகள், 2வது மற்றும் 3வது தளத்தில் 29 கடைகள் என சுமார் 120 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து உள்ளே வருவதற்கும் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்க வருகை தரும் கார், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கென்றும் 9 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை கடந்த 8-ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ, கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் தினேஷ்குமார், எஸ்.பி.பாலாஜி சரவணன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பயணிகளிடம் குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதி குறித்து கேட்டறிந்தார். பேருந்து நிலைய வளாகத்தை எந்நேரமும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமென சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், பயணிகளிடம் தங்களுக்கு எந்த குறைகள் தென்பட்டாலும் என்னை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்தார். இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு அமைச்சர் நேரடியாக வந்து நம்மிடம் குறைகளை கேட்டறிவதை கண்டு பயணிகள் குஷியடைந்தனர்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை ஆணையர் ராஜாராம், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர் கதிரேசன் மற்றும் மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

