தூத்துக்குடி
தூத்துக்குடியில் புகழ்பெற்ற பழமையான பெருமாள் கோவில் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இத்திருக்கோயிலில் 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தற்போது பெருமாள் கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: கடந்த அதிமுக ஆட்சியில் நடத்த வேண்டிய கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் உள்ளது. அடுத்த ஆண்டு பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை இப்போதே துவங்கப்பட்டு நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில்; தமிழ் பாரம்பரிய முறைப்படி சாஸ்திரப்படி நடைபெறுகிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக, என்று தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் மூலம் பரப்பி வருகின்றனர். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் ஒருசிலர் தேவையற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் மதவெறியைத்தான் எதிர்க்கிறோம். அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் மதிக்கும் கட்சியாக என்றும் திமுக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள திருக்கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 1000 திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது, என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது, அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல்அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஆறுமுகம், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, ஜெயலெட்சுமி, பாலசங்கர், சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், சிவன் கோவில் கணக்கர் சுப்பையா, மற்றும் மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

