தூத்துக்குடி, அக். 5-
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், துணை ஆணையர் ராஜாராம்ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில், மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர், துணை செயற்பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் சுமதி, மண்டல ஆணையர்கள் தனசிங், சேகர், ராமச்சந்திரன், சந்திரமோகன், நகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள்,கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டு ராஜா, நிர்மல்ராஜ், பால குருசாமி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி பேசியதாவது:-
பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பழைய பஸ் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. எனவே, விரைவில் இந்த பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மாநகரப் பகுதிகளில் சாலை போடும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வரும் தசரா பண்டிகைக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும். குடிதண்ணீர் பிரச்னை உள்ள இடங்களில் அதைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹவுஸிங் போர்டு பகுதியில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஜோதி நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும். அதன்பின்னர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராகும். மேலும், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக மோட்டார் மூலம் பெரிய தரைதள நீர் தேக்கத் தொட்டிகளில் நீரை சேமிப்போர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை முறைப்படுத்தப்படும்.
விரைவில் மழைக்காலம் வர இருப்பதால் வெள்ள நீர் ஓடையான, பக்கிள் ஓடையில் உள்ள அமலைச் செடிகள் மற்றும் கோரை புற்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத்தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு இந்த மாநகராட்சி கூட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், நெகிழி பயன்பாடு காரணமாக உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, நீரோடைகளில் தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்படுகிறது. தற்போது, மாநகரில் நெகிழி பயன்பாடு குறைந்துள்ளது. இருப்பினும் அதனை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் பொதுமக்கள் 1800 203 0448 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், சுதா, கீதாமுருகேசன், முத்துவேல், தனலெட்சுமி, சுப்புலெட்சுமி, இசக்கிராஜா, கனகராஜ், நாகேஸ்வரி உள்ளிட்டோர் தங்கள் வார்டு பகுதிகளில் உள்ள மின் விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து, பூங்கா பராமரிப்பு, தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம், வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம், மாநகராட்சியில் நடப்பாண்டு மேற்கொள்ளவேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்த 6 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

