தூத்துக்குடி,
அக்,4
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியானது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகளவில் நிறைந்துள்ள பகுதியாகும். சுமார் 60க்கும் மேற்பட்ட சிறிய குக்கிராமங்கள் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் குடிநீர் அனைவருக்கும் வழங்குவது மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் முறையான எந்த கட்டமைப்பு பணிகளும் நடைபெறாததால், அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகினர். திமுக ஆட்சி அமைந்த பின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான். அவை முன்னேறினால் தான் நாடு மேம்பாடு அடையும் என பல கட்டங்களில் பேசியுள்ளார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவராக சரவணக்குமார் பொறுப்பேற்ற காலம் முதல் தொடர்ந்து மக்கள் பணி தான் முக்கியம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் மனுக்களாக பெற்றுக் கொண்டு, மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட அதிகாரத்தில் உள்ள பணிகளை தான் நிறைவேற்றியும், மற்ற கோரிக்கைகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி கனிமொழி எம்.பி, சண்முகையா எம்.எல்.ஏ, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரிடம் குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளை செய்து கொடுக்க வேண்டுமென ஊராட்சி பொதுமக்களின் நலன் கருதி கோரிக்கை வைத்து தொடர்ந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு வரும் குடிநீர் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று, அதை அதிகரித்த நிலையில், மேலும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் குறுகிய காலத்தில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்ததின் காரணமாக குடிநீர் தேவையும் அதிகரித்தது. அதை போக்கும் வகையில் அனைத்து கிராம புற பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அத்திட்டத்தை மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
அதன் அடிப்படையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஒவ்வொரு பகுதியிலும் குடியிருக்கும் மக்களுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ராம்தாஸ் நகர், சுனாமி காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, இளைஞரணி கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட விழாவில், ஊர் நிர்வாகிகள் கனி, சரவணன், ராமர், பொன்னுச்சாமி, செல்வம், இசக்கி முத்து மற்றும் மகளிரணியினர் ஊராட்சி மன்ற தலைவருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

