தூத்துக்குடி
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற 29ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற 29ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
அதன்படி வரும் 29ம் தேதி காலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி தனியார் ஹோட்டல் முன்பிருந்து எஸ்இபிசி நிறுவனம் வரை ‘நடப்போம் நலம்பெறுவோம்” எனும் நோக்கில் 8 கி.மீ தூரம் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடத்தை ஆய்வு செய்து நடைபயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

காலை 11.00 மணி அளவில் தூத்துக்குடி சங்கர் காலனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடப் பணிகளை ஆய்வு செய்கிறார். மேலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.4.06 கோடி மதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார்.
எனவே மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டு செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

