திருச்செந்தூர் உட்கோட்டம் ஆறுமுகநேரி மற்றும் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது – 5 ¾ கிலோ கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கஞ்சா, போதைப்பொருள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்துப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் தலைமையில் தலைமைக் காவலர்கள் திரு. ராஜ்குமார், திரு. இசக்கியப்பன், திரு. சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (10.03.2021) ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது ஆறுமுகநேரி சோதனைச் சாவடி அருகே காயல்பட்டினம் மன்னர் ராஜா கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ஆறுமுகம் (32) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்மந்தமாக ஆறுமுகநேரில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அதே போன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் நேற்று (10.03.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது உடன்குடி தேரியூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் உடன்குடி தேரியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் சரத்குமார் (27) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1.750 கிலோகிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 5 ¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 61 வழக்குகள் பதிவு செய்து, 73 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூபாய் 2, 55, 000/- மதிப்புள்ள 25 ¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை சம்மந்தமாக 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 40 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரித்துள்ளார்.

