தூத்துக்குடி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் உள்ள தனது இல்லத்தில் உள்ள அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் போன்றவற்றில் பொதுமக்கள் எந்நேரமும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இதையும் கடந்து தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் நேரடியாக வார்டு வாரியாக களமிறங்கி பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று வருகிறார். அதில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு, வேலைவாய்ப்பு, நலத்திட்ட உதவி, பென்சன் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அரசு சார்ந்த திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த மனுவை அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பல நலத்திட்ட உதவிகள் மாவட்ட திமுக கழகம் சார்பிலும் தனது சொந்த நிதியில் இருந்தும் வழங்கி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட பூபாலராயர்புரம் 2வது தெருவை சார்ந்த சலவை தொழிலாளி மாரிமுத்து, ஐயன் பாக்ஸ் வேண்டி காலையில் அமைச்சர் கீதாஜீவனிடம் அவரது இல்லத்தில் நேரில் மனு அளித்திருந்தார். அம்மனுவை கனிவுடன் பரிசீலனை செய்த அமைச்சர் கீதாஜீவன் உடனடியாக டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சலவை தொழிலாளி மாரிமுத்துவுக்கு ஐயன் பாக்ஸ் வழங்கினார். அமைச்சர் கீதாஜீவனிடம் மனு வழங்கிய சுமார் 2 மணி நேரத்தில் அம்மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்த மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் பலர் பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தனலெட்சுமி, ஞானசேகர்; ஆகியோர் உடனிருந்தனர்.

