தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம். நமது மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்; அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் வாயிலாக முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பெண்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு, உங்களது விண்ணப்பங்கள் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம். சிலருக்கு வங்கி கணக்கில் பிரச்சனை உள்ளது. சிலர் தங்களது பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்ததால் பிரச்சனை உள்ளது. சிலர் மேலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, கீழுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளார்கள். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும். சிலர் தபால் நிலையங்களில் கணக்கு வைத்துள்ளார்கள். இதுபோன்ற வங்கி கணக்கு தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் உள்ளது.
எனவே இதுமாதிரியான தவறையெல்லாம் ஆன்லைனில் சரி செய்யும் பணிகள் இந்த முகாம் வாயிலாக நடைபெற்று வருகிறது. கள ஆய்வு பணியின்போது சிலரும், வருமான வரி செலுத்தியதாலும் சிலருக்கும் விண்ணப்ப படிவங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் 30 நாட்கள் இருப்பதால் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு செய்வதற்கான கட்டணங்கள் எதுவும் இ-சேவை மையத்தில் வசூலிக்கக்கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தாசில்தார்கள் பிரபாகரன், ஜான்சன், தேவசகாயம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் கந்தசாமி, ராமுத்தம்மாள், வட்டசெயலாளர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி மாக்கின்ராபட், மற்றும் கருணா, மணி, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

