தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்த சூசைநகரில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவான திமுக கொடியேற்றும் விழா, மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கலைஞர் தன்னுடைய 14 வயதில் பொதுவாழ்க்கைக்கு வந்தார். ஏழை எளிய மக்கள் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் அரசு பணிகளை அலங்கரிக்க வேண்டும் என்று சொல்லி பல்வேறு முயற்சிகள் எடுத்தார். இதற்காக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என பல்வேறு விதமான மக்களுக்கு இட ஒதுக்கீடுகளை வழங்கினார். பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்று சொல்லி சட்டம் கொண்டு வந்தார். அவருடைய வழியில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். வருகிற செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை தகுதியான அனைவருக்கும் வழங்கப்படும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்னற்ற சாதனைகள் திமுக ஆட்சியில் நடைபெறுகிறது. என்று பேசினார்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகபை, டிபன் பாக்ஸ், பெண்களுக்கு அரிசிபை மற்றும் அரசு தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். இந்த விழாவில் மாற்றுக் கட்சியினை சேர்ந்த 35 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
விழாவில் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் விஜயகுமார், பச்சிராஜன், சுயம்பு, பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, வட்டச் செயலாளர் பிரசாந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த், நிர்வாகிகள் சோலையப்பன், மாரிமுத்து மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

