தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 4ம் தேதி தூத்துக்குடி வருகிறார். அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கவேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது

மாநில திமுக இளைஞரணிச் செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 4ம் தேதி தூத்துக்குடி வருகிறார். அன்று மாலை 3 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன் பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூட்டம் மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத்தில் உள்ள கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மாலை 5.30 மணிக்கு, புதுக்கோட்டை பிரதானச் சாலை அருகே நடைபெறும் இளைஞரணி செயல்வீரர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்டத்தில் உள்ள தலைமை கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி மற்றும் வார்டுச் செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், இளைஞரணியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

