சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் ஜே.சி.ஐ பியர்ல் சிட்டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் காவலர்களுக்கான மகளிர் தின விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
சர்வேதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் ஜே.சி.ஐ பியர்ல் சிட்டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் காவலர்களுக்கான மகளிர் தின விளையாட்டு போட்டியில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், பெண்கள் நாட்டின் கண்கள். சமுதாயத்தில் பெண்களுக்கு ஆண்களை போல் நிகரான சம உரிமை, சம அதிகாரம் நாம் கொடுத்திருக்கின்றோம் என்பதையும் அவர்களை பாதுகாப்பதற்கென்று தனி சட்டங்கள் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்துவதற்காக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்றும், பெண்கள் தங்களது முன்னேற்திற்கு பல தடைகளை தாண்டி தான் வரவேண்டியுள்ளது என்றும், பெண் குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம், பாலியல் தொந்தரவு மற்றும் பெண் அடிமைத்தனம் இந்த நான்கில் ஏதாவது ஒன்றால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த தடைகளையெல்லாம் தாண்டி முன்னேறும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தினம் மூலம் மரியாதை செய்வதற்காக விமர்சையாக கொண்டாடுகிறோம். பெண்களுக்கு கல்வி முக்கியம். பெண்கள் கல்வி கற்பதினால் சமுதாயம் முன்னேறும். பெண்கள் ஆண்களை போல் தற்காப்பு கலைகளை கற்று கொள்ள முன் வர வேண்டும். பெண்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் போராட வேண்டும். கோழை போல் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும், பெண்களாகிய நீங்கள் போராட பிறந்தவர்கள், சாதிக்க பிறந்தவர்கள் என்று கூறி அனைத்து பெண் காவலர்களுக்கும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமதி. ரேவதி பாலன், அரசு வழக்கறிஞர் சுபாஷிணி, ஜே.சி.ஐ பியர்ல் சிட்டி அமைப்பின் தலைவர் திரு. வில்சன் அமிர்தராஜ், செயலாளர் சுதா சாலமோன், திட்ட ஒருங்கிணைப்பாளர் அஜிதா பிரபு, சங்கரி பிரசாத் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் செந்தாமரை கண்ணன், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், . சுனைமுருகன் உட்பட பெண் காவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.




