தூத்துக்குடி.
தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த துறையில் ஆர்வம் செலுத்த தொடங்கி உள்ளன. அதனால், இந்திய மின்சார உற்பத்தியில் காற்றாலைகளின் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தின் பங்கு என்பது 15 சதவிகிதத்தை எட்டி உள்ளது. இதனை படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
காற்றாலைகள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலுமே அமைக்கப்படுகின்றன. நகரங்களில் வானுயர கட்டடங்கள் இருப்பதால் காற்றின் வேகம் தடுக்கப்படுகிறது. அதனால் காற்றாலை மின் உற்பத்திக்கு கிராமப் பகுதிகளே உகந்த இடமாக தேர்வு செய்யப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், எதிர்காலத்தில் மின்கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டு அறுந்துவிழுந்தால் தண்ணீர் மூலம் மின்சாரம் பாய்ந்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மக்களுக்கும், கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும், விவசாயத்திற்கும் கேடு விளைவிக்கும் காற்றாலைகள் அமைப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் சமூக நல ஆர்வலர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவில் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் வளர்ச்சிக்கு சில தவிர்க்க முடியாத பணிகளை மேற்கொள்வது வழக்கமான இயல்பு தான். ஒரு வளர்ச்சியை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொண்டு மற்றவர்களின் வீழ்ச்சியை பற்றி சிந்திக்காதது ஏன்? என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் இசக்கிராஜா கூறுகையில்
தூத்துக்குடி மாவட்டத்தில், 63 ஊராட்சிகளை கொண்ட பரந்து விரிந்த பெரிய தொகுதியாகவும், அனைத்து தரப்பினரும் வாழும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்ட போது, பல போலி பத்திரங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் விவசாயிகள் மற்றும் சிலரின் இடங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட அனல்மின்நிலையம் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு தற்போது காட்சிப் பொருளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
எந்தவொரு பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைந்தாலும், அதற்கு நாங்கள் எதிரி அல்ல. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அதன் மூலம் தமிழகமும் முன்னோடி மாநிலமாக திகழவேண்டும், என்ற எண்ணம் உடைய நாங்கள் எதிர்ப்பதும் கேள்வி கேட்பதும் ஒரே கோரிக்கை தான். இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்வது கிராமங்கள் தான் என்று கூறுவார்கள். காரணம் விவசாயம் சார்ந்த விவசாயிகள் இந்த நாட்டில் வாழும் மனிதர்களுக்கு தேவையான உணவு, தானியங்கள், பல்வேறு வகையான காய்கனிகள், தனது சொந்த இடத்தில் அதை உற்பத்தி செய்து வெளி சந்தையில் விற்பதன் மூலம் எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஆரோக்கியத்திற்கும் உணவாகவும், மருந்தாகவும் இருந்து வருகிறது.

இதை அழித்து விட்டு தான் ஒரு நிறுவனம் தேவையெல்லாம் அதை எதிர்ப்பதில் நான் முதல் ஆளாக இருப்பது மட்டுமின்ற என்னுடைய அமைப்புகளும் களம் இறங்கும். காரணம் அதிக விவசாய பகுதியான ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாநகரத்தை ஒட்டியுள்ள பகுதியை தவிர்த்து, 50 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலங்களை விலை கொடுத்து வாங்கி சில இடங்களில் அபகரிப்பு பணிகளையும் மேற்கொண்டு முறையான அனுமதியும் இல்லாமல் பல ஊராட்சி நிர்வாகத்தை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக காற்றாலை அமைப்பதை தான் எதிர்க்கிறேன். மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு காற்றாலை வேண்டும். ஆனால், விவசாயிகளின் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு வேடிக்கை பார்ப்பதை எதிர்க்கிறோம். எதிர்கால தலைமுறையினர் வாழ கூடிய பூமியாக இருக்க வேண்டிய இடத்தை பல்வேறு வகையில் அபகரித்துக் கொண்டு காற்றாலை அமைப்பதன் மூலம் அந்த தொகுதிக்குள் 80 சதவீதம் பேர் வாழ முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. இதன் மூலம் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதை அந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? மக்கள் நலன் இவர்களுக்கு முக்கியமா? பொதுமக்களுக்கு எதிரான திட்டம் முக்கியமா? முதலமைச்சர் கவனத்திற்கு செல்லாத மர்மம் என்ன? பாலைவனமாக விரைவில் மாற உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியை சோலைவனமாக மாற்ற தமிழக அரசு முன்வருமாறு என கேள்வி எழுப்பியுள்ளார்.

