தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கனிமொழி எம்.பி தலைமை வகித்தார். மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்புரையாற்றினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கனிமொழி எம்.பி பேசுகையில் முதலமைச்சர் கோப்பை என்பது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டியாகும். இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள், கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
பல தடைகளை தாண்டி சாதித்திருக்கக்கூடிய உங்களை பார்க்கும் பொழுது நம்பிக்கையையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் தருகிறது. கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன், கார்த்திக் என்ற 2 பேர் தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் ஸ்ரீமதி கலந்து கொண்டு 4வது இடத்திற்கான வாய்ப்பினை பெற்றிருக்கிறார். விளையாட்டு மீது இருக்கக்கூடிய ஆர்வத்தை விட்டுவிடாமல் முன்னேற வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பிறகு 90 விளையாட்டு பயிற்றுநர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் இந்த அரசு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
நமது மாவட்டத்தில் 5 பேர் அந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். இந்த அரசு, ஆட்சி விளையாட்டில் ஆர்வம் இருக்கக்கூடியவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சுந்தரவேல்புரம்;, அசோக்நகர், பழைய மாநகராட்சி அருகில், புல் தோட்டம் ஆகிய 4 பகுதிகளில் உள் விளையாட்டு அரங்குகள் ஷட்டில் காக் விளையாட்டிற்காக விரைவில் திறக்கப்படும்.
வெற்றி, தோல்வியை தாண்டி விளையாடுவது என்பதே ஒரு மகிழ்ச்சியான ஒன்று. நண்பர்களை பார்ப்பதற்கு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு விளையாட்டு அவசியம், அதில் இருக்கக்கூடிய ஆர்வம் என்பது உங்களுக்கு ஒரு உந்து சக்தியாக, எதிர்காலத்தில் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். தோனி ஒரு முக்கியமான கால கட்டத்தில் சொல்கிறார், தோல்விகளை தொடர்ந்து நாம் எதிர்கொண்டு இருந்தோம் என்றால் ஒரு நாள் தோல்வி உங்களைப் பார்த்து துவண்டு ஓடிவிடும் என்றார். அதுவரை நாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்போம். தூத்துக்குடியில் இருந்து மிகச்சிறந்த வீரர்களை, வீராங்கனைகளை இந்த நாட்டிற்கு, உலகிற்கு உருவாக்கி காட்டுவோம். உங்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் என்று கனிமொழி எம்.பி பேசினார்.
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு எல்லா வகையிலும் உயர வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருகிறார். நமது மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். குறிப்பாக தென் மாவட்ட இளைஞர்கள் கபடி போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். கோவில்பட்டியில் ஹாக்கி போட்டியில் இளைஞர்களை ஊக்குவித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு வீரர்களுக்கு பயிற்சியளித்து இந்திய அளவில் வீரர்களை உருவாக்கி வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் தமிழ்நாடு விளையாட்டு துறையும் வளர வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியை பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு நடத்தி வருகிறார்கள். இப்போட்டியில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து தமிழ்நாடு அளவில், இந்திய அளவில் வீரர்களை உருவாக்கி வருகிறார்கள். இப்போட்டிகளில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, பயிற்சி கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சப்கலெக்டர் கௌரவ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலர்கள் ரிக்டா, பொன்னப்பன், சந்திரபோஸ், கண்ணன், விஜயகுமார், ராஜதுரை, கந்தசாமி, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, டென்சிங், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் மகேஸ்வரசிங், வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், பிரபாகர், பாஸ்கர், தாசில்தார் பிரபாகர், முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர். கூடைபந்து பயிற்றுநர் ஆனந்த் நன்றியுரையாற்றினார்.

