நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழிற் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜூன் 8
இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி பெறுவதில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில்முனைவோரின் பங்கு குறைவாய் இருப்பதை உணர்ந்து பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவர்களுக்கெனப் பிரத்தியேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தினை நடப்பு நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்திற்கும் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். உணவு பதப்படுத்துதல், ஆட்டோ மொபைல் பாகங்கள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் உற்பத்தி, மளிகை கடை, வணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், மக்கள் பயன்பாட்டிற்கான வாகனங்கள், கான்கிரீட் மிக்ஸர், ஆம்புலன்ஸ் குளிரூட்டப்பட்ட பதப்படுத்தும் பொருட்களுக்கான வாகனம், அனைத்து உற்பத்தி சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். மேலும் டெல்டாவின் ஓர் அங்கமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயத்திற்கான இயந்திர விவசாய உபகரணங்களை வாடகை விடுவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். மேலும் புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே நடத்திக் கொண்டிருக்கும் தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் மானியமாக அதிகபட்சமாக ரூபாய் 1.5 கோடி வரை வழங்கப்படும.மேலும் கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 6மூ வட்டி விகிதம் மானியமும் வழங்கப்படும். தொழில்முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு. பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்த எந்த தனி நபரும் மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களின் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டமை, ஒரு நபர் கம்பெனி, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்களுக்கு எந்த கல்வி தகுதியும் தேவையில்லை. மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவிகிதம் அரசின் பங்காக முன்முனை மானியம் பெறலாம். எனவே, பயனாளர்கள் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுக்கு என்ற தளத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். தகுதியும் ஆர்வம் கொண்ட பட்டியலின மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர் மற்றும் தற்போது பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவரால் நடத்தப்படும் தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று நமது மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக உருவாக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.22,92,009 மதிப்பீட்டில் இணை மானிய நிதி வங்கி கடனுக்கான காசோலையினையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.29.7 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கடனுக்கான காசோலை போன்ற நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
இம்முகாமில் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து நகரமன்ற துணைதலைவர் செந்தில்குமார் மாவட்ட தொழில் மைய மாவட்ட தலைவர் சிவகுமார் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

