கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அதில், இந்தியாவும் சிக்கிக்கொண்டது. தமிழகத்தில் முதல் கரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் 7-ந் தேதி தான் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது, அமலில் இருக்கும் 14-வது கட்ட ஊரடங்கு இம்மாதம் 31-ந் தேதி வரை நீடிக்கிறது.
ஊரடங்கு நடைமுறை தொடங்கியபோதே, பொதுமக்கள் போக்குவரத்தை குறைக்கும் நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொற்று குறைந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் கரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தியாவுக்குள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந் தேதி தமிழக அரசு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அரசாணையாக வெளியிட்டது. இந்த அரசாணையுடன் இணைந்து கூடுதல் வழிமுறைகள் கொண்டு புதிய அரசாணையை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:- வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர்த்தக ரீதியாக, 72 மணி நேரம் (3 நாட்கள்) தங்கும் வகையில் வரும் பயணிகளுக்கு வீட்டு கண்காணிப்பு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து (கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர்த்து) வரும் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வேறு மாநில விமான நிலையம் வழியாக தமிழகம் வரும் பயணிகள், அந்த விமான நிலையத்தில் கரோனா பாதிப்பு இல்லை என்றால் பரிசோதனைக்கு, ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் கொடுத்துவிட்டு புறப்பட்டு செல்லலாம். அவர்களது பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வார்.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் (இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா தவிர்த்து) www.newdelhiairport.in என்ற இணையதளத்தில் கரோனாவுக்கான சுய உறுதிமொழியை பயண தேதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பயண தேதிக்கு 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவை கையில் கொண்டு வரவேண்டும். இந்த முடிவை மேற்கண்ட இணையதளத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

