தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேப்பலோடை பட்டினமருதூர் ஊராட்சியில் வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனையின் பேரில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
மார்கண்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கொரோனா பாதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் மக்களை காக்கும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2000 என இரு தவணைகளாக மொத்தம் ரூ.4000 வழங்கினார்கள். நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தினை வழங்கினார். மேலும், கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள கடன்கள், விவசாய கடன், 5 பவுன் நகைக்கடன் ஆகியவற்றையும் தள்ளுபடி செய்தார். முதலமைச்சர் மக்களுக்காக தொடர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தொடர் திட்டம் என்றால் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 என்றால் அது தொடர்ந்து வழங்கப்படும். இதேபோல் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள் ஆகியோருக்கான உதவித்தொகையும் தொடாந்து வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டத்தை தந்திருக்கிறார்கள். மேலும், இல்லம் தேடிகல்வி, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. ஆனால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் முட்டைகள் வழங்கப்பட்டு உண்மையான சத்துணவு திட்டமாக விளங்கியது.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அரசுபள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளார்கள். இன்றைக்கு அத்தனை சாலைகளையும் சரிசெய்யும் திட்டங்களையும் தந்திருக்கிறார்கள். அதேபோல கனிமொழி எம்.பி. எந்த பகுதியாக இருந்தாலும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அத்தனை பேருக்கும் உதவிசெய்யக் கூடியவர்களாக விளங்கி வருகிறார்கள். முதலமைச்சர் இரண்டாண்டு சாதனை ஆட்சி முடிந்து இன்று மூன்றாவது ஆண்டினை தொடங்குகிறார்கள். நீண்ட ஆயுளோடு எந்த சக்தியாலும் அவரை தொடமுடியாத நிலையை உருவாக்குகின்ற வகையில் மக்கள் சக்தியான நீங்கள் என்றென்றும் அவருக்கு ஆதரவுதர வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைதலைவர் காசிவிஸ்வநாதன், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, ரம்ஜான் பேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தங்கச்சாமி, முத்துராஜ், மகாராஜன், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

