தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மில்லர்புரம் பர்மாகாலனியில் அமைந்திருக்கும் ஸ்ரீமுனீஸ்வரர் திருக்கோவில் 28ம் ஆண்டு கொடை விழாவையொட்டி கடந்த 5ம் தேதி கால்நட்டு விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டு, தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவையொட்டி கோவில் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மாலை ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீமாரியம்மன் கண்திறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து நாடு வளர்ச்சியடையவும், எல்லா மக்களுக்கும் எல்லா செல்வங்களும் கிடைக்கப் பெற்ற மழை வளம் பொழிந்து விவசாயம் தலைத்தோங்கி செழித்திடவும், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டியும், சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
வரும் 12.05.2023 வெள்ளிக்கிழமை காலை தீர்த்தகரை சென்று வருதல். பின்னர் மதியம் சிறப்பு பூஜையுடன் மதிய கொடை நடைபெற்று 2000 பேருக்கு பொது சமபந்தி விருந்து நடைபெற இருக்கிறது. மாலையில் சிறப்பு பூஜையுடன் தொடர்ந்து பொங்கலிடுதல், முளைப்பாரி சுற்றி வருதல், அதனை தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்துடன் சாம கொடை விழா நடைபெறுகிறது. பின்னர் இரவு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. அன்னதானத்தை பண்டாரவிளை வைத்தியர் முருகேசன் நாடார் துவக்கி வைக்கிறார்.
கோவில் கொடை விழாவை முன்னிட்டு திமுக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், மாநில பேச்சாளார் சரத்பாலா, வட்ட செயலாளர் கீதா மாரியப்பன், தொழிலதிபர்கள் பொன்னப்பன், குமார், ஆனந்த், சசிகுமார் மற்றும் பல்வேறு ஊர் பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்பட சுற்றுப்பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமர், தர்மகர்த்தா கந்தகுமார், செயலாளர் சரவணன், பொருளாளர் தங்கமாரியப்பன், துணைதர்மகர்த்தா கணேசன், பொருளாளர் அன்புராஜ், செயலாளர் ஜெயராஜ், ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

