நாகப்பட்டினம் ஏப்ரல் 27
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதபராமபுரம் ஊராட்சியில் உள்ள செருதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களது கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, தமிழக அரசு கல்வியில் பின்னடைவுக்கான காரணங்களை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த இணை செயல்பாடுகளான கலை அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாய்ப்பு வழங்கும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் கீழையூர் ஊராட்சி பிரதபராமபுரம் ஊராட்சியில் உள்ள செருதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடு திரை கணினி வகுப்பினை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வகுப்பினால் மாணவர்கள் கல்வி திறன் மேம்பாடு அதிகரிக்கும், கற்றலுக்கு எளிமையாக இருக்கும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடம் குறித்த விளக்கத்தினை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். உலகளவில் கல்வி குறித்த தகவல்களை தொடுதிரை மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திகொண்டு திறனை வளர்த்து கொள்ள வேண்டும். அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலா ரூ.1.25 இலட்சம் என மொத்தம் ரூ.2.50 இலட்சம் மதிப்பிலான இந்த இரு தொடுதிரைகளினால் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி பயிலும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 90 மாணவர்கள், 101 மாணவிகள் என மொத்தம் 191 மாணவ மாணவிகளும் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 71 மாணவர்கள், 56 மாணவிகள் என மொத்தம் 127 மாணவ மாணவிகளும் பயன் பெறுகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, செருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பிரதபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

