மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா குமரி மாவட்டத்துக்கு வருவதை முன்னிட்டு, அவா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமாா் அபிநபு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
தமிழகத்தில் ஏப். 6 ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதனால் அரசியல் தலைவா்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேசிய தலைவா்களும் தமிழகம் வரத் தொடங்கியுள்ளனா். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 1 ஆம் தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டாா். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா 2 ஆவது கட்டமாக தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
இதற்காக, அவா் திருவனந்தபுரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்7) காலை நாகா்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்துக்கு ஹெலிகாப்டா் மூலம் வருகிறாா். பின்னா் அங்கிருந்து காா் மூலம் பீச்ரோடு சந்திப்பு வழியாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலுக்கு செல்கிறாா். அங்கு சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு இந்து கல்லூரி சாலை, செட்டிகுளம் வழியாக வேப்பமூடு சந்திப்புக்கு வருகிறாா்.
வேப்பமூட்டில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். தொடா்ந்து வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியாா் விடுதியில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.அமித்ஷா வருகையையொட்டி வழித்தடம், பங்கேற்கும் நிகழ்ச்சி இடங்களை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமாா் அபிநபு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், இந்துக் கல்லூரி உள்பட பல்வேறு பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். இந்த ஆய்வின் போது குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன், குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஸ் சாஸ்திரி உள்பட பலா் உடனிருந்தனா்.

