ஆலங்குளம் அருகே கொய்யாத்தோப்பில் வீசப்பட்ட சாக்கு மூட்டைக்குள் இருந்து கொலை செய்யப்பட்ட பெண் உடல் மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட் பெண் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார். இவருக்குச் சொந்தமான கொய்யாத்தோப்பு வழியே சென்றவர்கள் தோப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்துள்ளனர். இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது தோப்பிற்குள் பிளாஸ்டிக் சாக்கு மூட்டை கிடந்துள்ளது. சாக்கு மூட்டையை அவிழ்த்த போது, அதில் முகம் சிதைக்கப்பட்டு பெண் உடல் இருந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பெண் யார் என்று தெரியவில்லை.
பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டைக்குள் வைத்து தோப்பில் வீசிச் சென்ற நபர்களும் யார் என்று உடனடியாக தெரியவில்லை. பெண் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு 40 வயது இருக்கும். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், ஆலங்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னிவளவன், ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்யப்பட் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

