தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவருடைய ஓத்துழைப்பும் அவசியம் பட்ஜெட் தாக்கல் செய்து மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கம்.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சிறப்பு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான உத்தேச பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்து பேசுகையில்: தூத்துக்குடி மாநகராட்சியில் 2023-2024-ம் நிதியாண்டில் வருவாய் நிதியில் சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ.31.64 கோடி, அரசு சுழல் நிதியாக ரூ.6.90 கோடி, அரசு மானியமாக ரூ.84 கோடி, ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.25.61 கோடி என மொத்தம் ரூ.148.15 கோடி வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சாலை, கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு செலவினங்களுக்காக ரூ.8.16 கோடி, இயக்க செலவினங்களுக்காக ரூ.47.33 உள்பட பல்வேறு செலவினங்களுக்காக ரூ.147.02 கோடி செலவாகும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1.13 கோடி உபரி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.57.97 கோடி வருமானம் வரும் எனவும், ரூ.50.42 கோடி செலவாகலாம் எனவும், இதன் மூலம் ரூ.7.55 கோடி உபரி வருவாய் வரும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கல்வி நிதியில் ரூ.5.62 கோடி வருமானம் வரும் எனவும், ரூ.3.86 கோடி செலவாகும் எனவும், இதன் மூலம் ரூ.1.76 கோடி உபரி வருமானம் கிடைக்கும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் 2023- 2024-ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.211.74 கோடியாக இருக்கும் எனவும், மொத்த செலவினங்கள் ரூ.201.30 கோடியாக இருக்கும் எனவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.10.44 கோடி உபரி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முத்துநகர் கடற்கரை பூங்காவை மேலும் மெருகேற்றும் வகையில் பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் வகையிலும், அனுமதிக்கப்படும் நேரமும் முறைப்படுத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 1180 சாலையோர வியாபாரிகள் அடையாளம் கண்டறியப்பட்டு ரூ.10 ஆயிரம் கடன் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் நவீன சுகாதார வளாகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடலாம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கான சார்ஜர் யூனிட் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கம் இங்கு அமர்ந்திருக்கிற நான் உள்பட கவுன்சிலர்கள் மக்களுக்காக பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும். இந்த வருடம் நமக்கு சவாலாக பல பணிகள் இருந்து வருகின்றன. அவை அனைத்தையும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு நிறைவேற்றி கொடுக்கும் இடத்தில் உள்ளோம் குறிப்பாக நான் ஏற்கனவே சொன்னப்படி 152 பூங்காக்கள் இருக்க வேண்டிய இடத்தில் 40 பூங்காக்கள் தான் உள்ளன. மற்ற இடங்களை பலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதுயாராக இருந்தாலும் பாரபட்சமின்றி மீட்கப்படும். பட்டா வாங்கி இருந்தாலும் ரத்து செய்யப்படும். கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் இது போன்ற ஆக்கிரமிப்பு இடங்களை கன்டறிந்து அதை மீட்பதற்கு எங்களோடு ஒத்துழைக்க வேண்டும். குடிதண்ணீர் தட்டுபாடு இல்லாமல் வழங்கி வருகிறோம். அனையில் நீர் மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. அனைத்து உறுப்பினர்களும் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். எல்லா பணிகளும் முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளித்து அனைவரிடமும் கருத்துக்களை பரிமாறி கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு பதிலுரையும் வழங்கினார். பங்கேற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பகக்கனி ஆகியோர் கறுப்பு உடை அணிந்திருந்தனர். மேலும் அவர்கள் திடீரென கூட்ட அரங்கின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், மேயர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்கள் இருக்கைகளுக்கு சென்று அமர்ந்தனர்.
கூட்டத்தில் துணை ஆணையர் குமார், செயற்பொறியாளர் பாஸ்கர், அதிகாரிகள் சரவணன், பிரின்ஸ், தனசிங், காந்திமதி, சேகர், ராமசந்திரன், ரெங்கநாதன், ஸ்டாலின், ராஜசேகர், ஹரிகணேஷ், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், ஜான்சிராணி, இசக்கிராஜா, சரவணக்குமார், ரிக்டா, சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரெங்கசாமி, சரவணக்குமார், சோமசுந்தரி, அதிஷ்டமணி, சரண்யா, வைதேகி, மெட்டில்டா, ஜாக்குலின் ஜெயா, ராஜதுரை, பட்சிராஜ், முத்துவேல், சுயம்பு, விஜயலட்சுமி, பாப்பாத்தி, பொன்னப்பன், கண்ணன், ராமர், ஜான், கந்தசாமி, பேபி ஏஞ்சலின், நாகேஸ்வரி, ஜெயசீலி, சுப்புலட்சுமி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், விஜயகுமார், அதிமுக கவுன்சிலர்கள் வக்கீல் மந்திரமூர்த்தி, வீரபாகு, வெற்றிச்செல்வன், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் தனலட்சுமி, முத்துமாரி, இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக், மும்தாஜ், மதிமுக ராமும்மாள், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

