நாகப்பட்டினம் மார்ச் 20
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “எண்ணும் எழுத்தும் கற்றலை – கொண்டாடுவோம்”; விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:
கொரோனா காலத்தில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காண 2022-ஆம் ஆண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையானது 2025-ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெற வேண்டும் என்பதே ஆகும். குழந்தைகள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படை கணித செயல்பாடு செய்யும் திறன்களையும் வளர்த்தெடுப்பதில் எண்ணும் எழுத்தும் திட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றல் மற்றும் கற்பித்தலால் குழந்தைகளிடையே மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்ட தாக்கத்தை மக்களிடம் முக்கியமாக பெற்றோர்களிடம் கொண்டு செல்ல “எண்ணும் எழுத்தும் கற்றலை – கொண்டாடுவோம்” என்கின்ற நிகழ்வு மார்ச்-16 முதல் மார்ச்-21 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது.
நம் மாவட்டத்தில் மார்ச்-19 ஆம் தேதி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம் உருவாக்கியுள்ள கற்றல் மற்றும் கற்பித்தலில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லுதல், எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் உள்ள கற்பித்தல் முறைகள், கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் பிற சிறப்பு அம்சங்களை மக்களிடையே குறிப்பாக பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். எண்ணும் எழுத்தும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்புப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்துதல், எண்ணும் எழுத்தும் பற்றி மக்களிடம் முக்கியமாக பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “எண்ணும் எழுத்தும் – கற்றலைக் கொண்டாடுவோம்” பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது .நம் மாவட்டத்தில் இந்த வாகனமானது புதிய பேருந்து நிலையம் – நாகப்பட்டினம் ஒன்றியம், வடக்கு வீதி – வேதாரண்யம் ஒன்றியம், தலைஞாயிறு கடைத்தெரு – தலைஞாயிறு ஒன்றியம், திருக்குவளை கடைத்தெரு – கீழையூர் ஒன்றியம், கீழ்வேளுர் கடைத்தெரு – கீழ்வேளுர் ஒன்றியத்தில் இந்த பரப்புரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் டி.சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) ஷெர்லின் விமல், வட்டாரக் கல்வி அலுவலர் இளங்கோவன், தiலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லேரிப் உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

