தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகர பகுதியான மட்டக்கடை பகுதியில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீஉச்சினிமாகாளி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் கொடை விழா கடந்த 7ம் தேதி செவ்வாய்கிழமை கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினமும் தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது. கோவில் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பல வண்ண தோரணங்களுடன் கோவில் பொழிவுடன் காட்சியளிக்கிறது.
13ம் தேதி திங்கள் கிழமை தீர்த்தவாரி, மாக்காப்பு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதானத்தை திருவைகுண்டம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சுடலையாண்டி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

செவ்வாய்கிழமை காலை பால்குடம் வீதி உலா, கும்பாபிஷேகம் தீபாராதனை, இரவு பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, முளைப்பாரி வீதி உலா, நள்ளிரவு சாமக்கொடை நடைபெறுகிறது. புதன்கிழமை காலை பக்தர்கள் 108 பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். வியாழன்கிழமை அதிகாலை பித்தளை சப்பரத்தில் அம்பாள் வீதி உலா, இரவு பச்சை சாத்துதல் செய்து வீதி உலா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை கோவிலில் வந்து சப்பரம் சேருதல் நிகழ்வு நடைபெற உள்ளன.
கோவில் கொடைவிழாவை முன்னிட்டு தினசரி பூஜைகள் நடைபெறுவதால் அனைத்து தரப்பு பக்தர்களும் அம்மனின் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

