தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகளும் சில சாலைகளும் முழுமையாக முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இன்னும் 40 சதவீதம் பணிகள் முடிவுபெறாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களும் இடையூறாக இருப்பதால் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி அருகில் காய்கனி மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு சிறு மற்றும் குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமத்தினர் தினமும் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அவ்வழியாக அரசு சார்ந்த பேருந்துகள், வாகனங்கள் என இரு சாலைகளிலும் வந்து செல்கிறது. அதற்கு மத்தியில் பொதுமக்களும் தனது கனரக, இலகுரக வாகனங்களில் சென்று வருகின்றனர். அப்பகுதியில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இதன் அருகில் செயல்பட்டுவரும் தற்காலிக பழைய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பேருந்துகள் அந்த வழியே கடந்து செல்ல முடியாமல் சில நேரங்களில் திணறி வருகிறது.


இதே பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகன காப்பகம் கட்டி முடிக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதால், காய்கனி மார்க்கெட் மற்றும் அதன் அருகிலுள்ள பூ மார்க்கெட் வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் சாலையோரங்களில் நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் பொறுப்பு மாநகராட்சிக்கு உண்டு என்பதை உணர்ந்து, ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்குள், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், இந்தப் பகுதியை ஆய்வு செய்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவுற்ற நிலையில் உள்ள வாகன காப்பகத்தை திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

