சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை 12 மணி நேரத்தில் கைது செய்த தனிபடையினருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ அம்பலசேரி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் கணேசன் (45) என்பவருக்கும் அம்பலசேரி சமத்துவபுரத்தை சேர்ந்த மணி மகன் ராமர்(25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணேசன் அம்பலசேரி ஆர்சி சர்ச் வளாகம் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ராமர் கணேசனை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு சம்மந்தப்பட்ட எதிரியை உடனடியாக கைது செய்ய குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஸ்குமார், சாத்தான்குளம் ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர், தட்டார்மடம் ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ், தூத்துக்குடி மத்திய குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து மேற்படி குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
️மேற்படி தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் அம்பலசேரி சமத்துவபுரத்தை சேர்ந்த மணி மகன் ராமர் (25) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவரை 12 மணி நேரத்தில் விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்.

