தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் விநாயகர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், வராகி அம்மன் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 16ம் தேதி(வெள்ளிக்கிழமை) பைரவரின் பிறந்த தினமான மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெறவுள்ளது.
மஹாதேவ காலபைரவாஷ்டமி என்பது காலபைரவர் பிறந்த தினமாகும். மஹா காலபைரவர் பிறந்த தினமான இந்நாளில் அவரை மனம் உருக வணங்கினால் வேண்டும் வரங்கள் யாவும் கிடைத்திடும், வாழ்வில் கடன் தொல்லைகள் யாவும் நீங்கி செல்வங்கள் பெருகிடும், தொழில் மேம்படும் என்பது ஐதீகமாகும்.
இதன்படி மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவவேண்டியும், இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும், நோய், நொடிகள், கடன் தொல்லைகள் இல்லாமல் செல்வங்கள் பெருகி வளமாக நலமாக வாழவேண்டியும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
சிறப்பு வழிபாடுகள் காலை 8.45மணிக்கு விநாயகர் வழிபாடும், 9மணிக்கு கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜையும், காலை 10மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவ-காலபைரவர் ஹோமமும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.30மணிக்கு மஹா காலபைரவருக்கு பால், பழம், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்கும், நெல், அன்னம், சங்கு, ருத்திராட்சம், தாமரை, புனுகு, அருகம்புல், மலர்கள் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து, மதியம் 12மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மதியம் 1மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4.30மணிக்கு காலபைரவர் மஹா யாக வழிபாடுகள் தீபாரதனையுடன் நிறைவடைகிறது.
சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

