தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு பணியேற்க உள்ள காவலர்களுக்கு இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் அறிவுரை வழங்கி பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 148 காவலர்கள் இன்று 26ம்தேதி தாலுகா காவலர்களாக நியமனம் செய்து, அவர்களை தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையிலும், அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் தூத்துக்குடி உட்கோட்டத்திற்கு 4 காவலர்களும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திற்கு 13 காவலர்களும், மணியாச்சி உட்கோட்டத்திற்கு 21 காவலர்களும், கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு 27 காவலர்களும், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு 13 காவலர்களும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு 17 காவலர்களும், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு 19 காவலர்களும், விளாத்திக்குளம் உட்கோட்டத்திற்கு 34 காவலர்களும் மொத்தம் 148 காவலர்கள் அவர்கள் விருப்பமனு அடிப்படையில் மேற்படி காவல் நிலையங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டனர். மேற்படி 148 காவலர்கள் இன்று ஆயுதப்படை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணியேற்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில் உள்ளுர் காவலர்களாகிய நீங்கள் நல்ல குணாதிசயங்களுடன் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், உங்கள் நடத்தைகள் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும், காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரர்களிடம் மரியாதையுடன் பேசி, அவர்களது குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கு உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போன்று ஒரு செயலை செய்வதற்கு முன் ஒன்றுக்கு பலமுறை யோசனை செய்து நியாயமான செயல்களை செய்ய வேண்டும், உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் கவனிப்பது போல் பொதுமக்களையும் அக்கறையுடன அணுக வேண்டும். நீங்கள் பணியேற்கும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறந்த முறையில் பணியாற்றி பொதுமக்களிடம் நீங்கள் ஹீரோவாக திகழ வேண்டும் என்று அறிவுரைகள் கூறி, அவர்களுக்கு தமது கரங்களால் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன், ஆயுதப்படை காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், ஈஸ்வரமூர்த்தி சுனைமுருகன், கிருஷ்ணமூர்த்தி, உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

