தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் 52 சென்ட் இடத்தை கிராம மக்களும் தனிநபர் ஒருவரும் உரிமை கொண்டாடியதால் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் தாசில்தார் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் இடம் அளவீடு செய்யப்பட்டதால் கோரம்பள்ளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் கிராமத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழி சாலையில் பெரியநாயகபுரம் பகுதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் சுமார் 52 சென்ட் இடத்தில் சுடலைமாடசாமி கோவில் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சாம் தேவதாசன் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அந்த இடத்தை தனது பெயருக்கு கிரையம் வாங்கி உள்ளார். அப்போது அவர் கோயில் இருக்கும் இடத்தில் உள்ளே நுழைய முயற்சிக்கும்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் இரு தரப்பினரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில்; அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கோரி வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாம் தேவதாசனுக்கு அந்த இடம் சொந்தமானது. எனவே தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தை அவருக்கு அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாததால் ஷாம் தேவதாசன் மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நவம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி 4 வார காலத்திற்குள் அந்த இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டுமென தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமாருக்கு உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து தாசில்தார் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்ய வந்தனர். அப்போது கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் இட உரிமையாளர் சாம் தேவதாசன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதில் எந்த பகுதியிலிருந்து எந்த பகுதி வரை சாம் தேவதாசனுக்கு பாத்தியப்பட்ட இடம் என்பதை தாசில்தார் செல்வகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு நீதிமன்றத்திற்கு தகவல் முறைப்படி தெரிவித்து, இதன் அடுத்தக்கட்ட உத்தரவை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த பிறகு இட உரிமையாளர் சாம் தேவதாசனுக்கு வழங்கப்படும். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

